கட்டுரை தளம் TN KALVI அதிகாரப்பூர்வ கல்விப் பதிவுகள் • Official Article Resource Portal
TNKalvi.online

பிளஸ் 2 பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியல்: அக்டோபர் 16-க்குள் திருத்தம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை முழுமையாகச் சரிபார்த்து உறுதி செய்யுமாறு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை தேர்வுத்துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் EMIS தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவரங்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் அக்டோபர் 16-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அந்தக் காலக்கெடுவுக்குள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றும்போது, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் பெறப்படும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றும்போது, தலைப்பெழுத்தும் (இன்ஷியல்) தமிழில் இருக்க வேண்டும் எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர்ப்பட்டியலின் அடிப்படையில்தான் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். எனவே, மாணவர்களின் விவரங்களில் தவறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும் பள்ளித் தலைமையாசிரியரும் முழுப் பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு திருத்தங்களைக் கோரி தேர்வுத் துறைக்கு அனுப்புவதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Kalviseithi

மூலத் தகவல்: மூலப் பக்கத்தைப் பார்க்கவும்